வரம் தந்த மழலை

மணமாகி மூன்றாண்டு முடிந்தும்
மகப்பேறு வாய்க்கவில்லை எனக்கு
மருத்துவரின் ஆலோசனைப் பெற்றும்
மாற்றம் ஏதும் நிகழவில்லை
மனிதாபிமானமில்லா மாந்தர் சிலர்
மலடியெனும் பட்டம் கொடுத்தனர்
மன்றாடிய தெய்வம் யாவும்
மவுனத்தையே பரிசாய் தந்தன
மாசமான தோழியை சந்திக்க
மறுத்துவிட்டார் அவளின் மாமியார்
மாடிவீட்டு குழந்தையை மகளெனவைத்து
மறைமுக நாடகம் நடத்திப்பார்பேன்
மறைந்திருந்து பார்த்த அவள்தாய்
மகளை அடித்து அழைத்துசெல்வாள்,
மண்வெட்டியால் உடலை இழந்த
மண்புழுபோல் துடித்தது மனம்
மாதவிலக்கு தேதி தள்ளிப்போக
மருத்துவர் சொன்னார் மசக்கையென
மண்ணில் கால்கள் படாவண்ணம்
மகிழ்ச்சியில் விண்ணில் மிதந்தேன்
மலடியெனும் சாபம் தீர்ந்து
மாதாயெனும் வரம் தந்தது மழலை

Comments