அரியலூர் மாவட்டத்தில்
சிமெண்ட் தொழிற்சாலைகள் இருக்குமிடத்திற்கே வடக்கே உள்ள ஊர்தான் குளத்தூர். முன்னாளில்
ஒரு பெரிய குளம் இருந்ததனால் அப்பெயர்ச் சூட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் சுண்ணாம்புக்
கலவை பாதிப்பு இருப்பதால் தொழில் வளர்ச்சிப் பெற்ற அளவிற்கு உழவு சிறப்படையவில்லை.
மேலும், வானம் பார்த்தப் பூமி என்பதால் உழவை நம்பிப் பயனில்லை எனப் பெரும்பான்மையினர்
தொழிற்சாலைகளுக்கும், கட்டிடத் தொழிலுக்கும், தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டனர்.
எஞ்சிய சிலரோ விறகு வெட்டுவது, கால்நடை வளர்ப்பது, வெளியூர்ச் சந்தைகளில் பொருட்களை
வாங்கி விற்பது எனத் தத்தம் அளவில் பிழைத்துக் கொண்டிருந்தனர்.
சாலை வசதிகள்
இருந்தாலும் பேருந்துகள் 2 மணி நேர இடைவெளியில்தான் வரும். அதனால் கூட்டம் சற்று அதிகமாகவே
இருக்கும். நடத்துனருக்கும், அப்பெண்மணிக்கும் தினமும் தகராறு இல்லாமல் போகாது. அவள்தான்
குளத்தூரில் காய்கறி விற்பனைச் செய்பவள். வயது 55 ஐ எட்டியதால் வேகமாக இறங்க முடியாது.
தினமும் தன் கூடையை ஏற்றி இறக்குவதற்குப் போராட்டம்தான். அவளும் இறங்க அவ்வூர்ப் பெண்மணிகள்,
என்ன அழகம்மா ஏன் இப்படிப் பண்ணுற என்று கிண்டலடித்துக் கொண்டே செல்வார்கள். அவள் பெயரில்
இருக்கும் அழகு, அவள் வாழ்க்கையில் இல்லாமல் போனதற்குக் காரணம் கணவன் மருது. சொந்த
விட்டுப் போகக்கூடாதென்பதற்கு 16 வயது அழகம்மாவை 35 வயது தாய்மாமன் மருதுக்குக் கட்டிவைத்தனர்.
அவர்களுக்குக் குழந்தைப் பிறந்தது அதற்குக் குமார் என்று பெயர் வைத்தனர். இவ்வாறு சென்ற
அழகம்மா வாழ்வில் மதுவாடை வீசத் தொடங்கியது. ஆம், மருது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி
வீட்டில் அழகம்மாவைத் துன்புறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான். வீட்டிற்கும் பணம்
குடுப்பதைக் குறைத்து மதுக்கடைக்கு அதிகமாக்கினான். அழகம்மா அவனைத் திருத்த முயன்றுத்
தோற்றாள். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள், அதாவது வெளியூரில் காய்கறி வாங்கி விற்பதென,
தொடக்கத்தில் அதற்கும் மருது முட்டுக்கட்டைப் போட்டான். அழகம்மாளின் உறுதியால் அவன்
அடிபணிந்தான். ஆனால், வேறுவகையில் தொல்லைக் கொடுக்கத் தொடங்கினான்.
காய்கறி விற்று
வீட்டில் சேமித்த பணத்தை எடுத்துக் குடிக்கத் தொடங்கினான். பணம் எங்கய்யா என்று கேட்டதற்கு,
என் வீட்டிலிருந்த பணத்தை யார கேட்கனும் என்று வாய்சவடால் பேசினான். அன்றிலிருந்து,
வீட்டில் பணம் வைக்காமல் தனது சுருக்குப் பையில் வைத்துக் கொண்டாள். அதனால், சினமுற்ற
மருது புதிதாக அழகம்மாவை அடிக்கத் தொடங்கினான். அழகம்மா வீட்டில் வறுமை என்பதால், தன்
நிலையைத் தன் குடும்பத்திற்குச் சொல்லாமல் தவிர்த்தாள். இது, மருதுக்கு மேலும் தைரியத்தைத்
தந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் தன் தந்தையை எதிர்த்தான். அப்பொழுது,
அவன் 10 வயது என்பதால் அவனையும் சேர்த்து அடித்தான் மருது. காலம் உருண்டோடியது குமார்
வாலிபன் ஆனான். அப்பொழுதும், மருது குடித்து வருவான், தன் மகன் இருந்தால் அமைதியாகப்
படுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.
குமாருக்குக்
கல்யாணம் செய்ய அழகம்மா முடிவு செய்தாள். மருது, என் சொந்தத்தில் தான் பொண்ணு எடுக்கனும்
என்று சொன்னதால், அவன் விருப்படியே திருமணம் நடந்தது. அன்னம் என்பது அழகம்மாளின் மருமகள்.
பெயரில் இருப்பதை ஏனோ அழகம்மாளுக்கும், மருதுக்கும் முறையாகத் தர மறுத்தாள். அழகம்மா
வயது 55 ஐ எட்டினாலும் காய்கறி வாங்கி விற்பதைத் தொடர்ந்தாள். அன்றும் வழக்கம் போல,
மருது குடித்துவிட்டு பிரச்சனைச் செய்த போது, குமார் தட்டிக் கேட்க இருவருக்கும் கைகலப்பு
தோன்றியது. இதைக் கண்டு, இருவரையும் விலக்கும் முயற்சியில் ஈடுபடும் அழகம்மாளை மருது
தள்ளி விட்டான். அவள் பக்கத்தில் இருந்த சுவரில் மோதி கை உடைந்தது. வலியில் துடித்தவளை,
திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அழகம்மாளின் தங்கை திருச்சி அரசு மருத்துவமனையில்
பணிச் செய்ததால், அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டாள். இந்நிலையிலும், மருது குடித்துவிட்டு
ஊரிலேயே கிடந்தான். மருமகள் அன்னமும், தன் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மகன் குமார்
மட்டும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் கூட இருந்தான். அழகம்மாவின் தங்கை, கொஞ்ச
நாள் என் வீட்டில் வைத்துப் பார்த்துகிறேன் என்று சொல்லி குமாரை ஊருக்கு அனுப்பினாள்.
குமார் செல்லும் போது, ஞாயித்துகிழமை வந்து பாக்கிறேன் என்று சொல்லிச் சென்றவன், 2
வாரம் ஆகியும் வரவில்லை. கை உடைந்த போது ஏற்பட்ட வலியை விட அழகம்மாவின் மனது வலித்தது.
தங்கையிடம் சொல்லி வேதனையுற்றாள். பின்பு, எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் குடு என்று
தங்கையிடம் சொன்னாள். நீ ஊருக்கே போயிடுக்கா என்ற சொல்லை காதில் வாங்காது, வேலை வாங்க
கொடுக்க முடியுமா? முடியாதா? என்று உறுதியாய் கேட்டதும் சரி என்றாள்.
அதன்படி, தனக்குத்
தெரிந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், வீடு கூட்டும் வேலையில் சேர்த்துவிட்டாள். அக்குடியிருப்பின்
முதலாளி, அழகம்மாளின் நிலையைப் புரிந்துகொண்டு கொத்தடிமை என்று சொல்லாமல் வேலைத் தந்தார்.
வாகனம் நிற்கும் இடத்தில் அழகம்மாவைத் தங்கச் சொன்னார். மாதம் 2 ஆயிரம் சம்பளம். அக்குடியிருப்பு
அலுவலக வாடகைக்கு மட்டுமே விட்டிருந்தார் அம்முதலாளி. அடுக்குமாடிக் குடியிருப்பைச்
சுத்தம் செய்வது, அக்குடியிருப்பில் உள்ளவர்களுக்குக் கடையில் பொருட்கள் வாங்குவது,
இரவு நேரங்களில் வீட்டை பாதுகாப்பது என 2 ஆயிரம் சம்பளம் கொடுத்து, நாள் முழுவதும்
வேலை வாங்கினார்கள். அழகம்மாவிற்குப் புது இடம் தன் குடிகார கணவன், மதிக்காத மருமகள்,
அன்பில்லா பிள்ளை என எல்லோரையும் மறக்க வைத்து மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அம்மகிழ்ச்சி
நீடிக்கவில்லை, அங்கும் வந்து தொல்லைக் கொடுக்கத் தொடங்கினான் மருது. அழகம்மா உறுதியாக
இருந்தாலும், தன் கணவன் அழைப்பதைத் தவிர்க்க முடியாமல் முதலாளியிடம் சொல்லிவிட்டு குளத்தூருக்கு
கிளம்பினாள். 2 நாட்கள் கழிந்தது, மறுபடியும் மருது குடித்துவிட்டுப் பிரச்சனைச் செய்தான்.
இம்முறை மகன் குமார், தன் மனைவி சொல்வதைக் கேட்டு மருதுவைத் தடுக்கவில்லை. அதனால்,
கொஞ்சம் அடி வலுவாக விழுந்தது. இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த அழகம்மா, முதல் பேருந்தில்
வீட்டைவிட்டு வெளியேறி திருச்சி சென்றாள். அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று முதலாளிளை
சந்தித்துத் தன் தவறுக்கு வருந்தினாள். கூலி குறைவாகக் கொடுத்து, நிறைய வேலை வாங்குவதால்
அழகம்மாவை மறுபடியும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
மாதம் 2 ஆயிரம்
சம்பளம் சாப்பாட்டிற்கே போதுமானதாக இல்லை. அக்குடியிருப்பில் அலுவலக வேலைக்கு வருபவர்கள்,
அழகம்மாவை சாப்பாடு வாங்க அனுப்புவார்கள். அப்பொழுது, அவர்கள் டீ குடிக்க வச்சுக்கோங்க
என்று 10ரூபாய் தருவார்கள். சில சமயம் அவர்கள், நீங்க ஒரு சாப்பாடு வாங்கிக்கோங்க என்று
சொல்லிவிடுவார்கள். இதனால், அழகம்மாவுக்கு உணவு வாங்கும் பணம் மிச்சமாகும் அதைப் பத்திரப்படுத்திக்
கொள்வாள். குமார் அழகம்மாவை பார்க்க வந்தான், ஏம்மா என்கிட்ட கூடச் சொல்லாம கிளம்பி
வந்துட்ட என்று கேட்டான். சரி, தன் மகன் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுவான் என்று மனதிற்குள்
மகிழ்ந்து கொண்டிருந்த தருணம், அம்மா பையனுக்கு உடம்பு சரியில்ல என்றான். பேரன் உடல்நிலை
குறித்து அழகம்மா சற்று கலங்கி என்னப்பா ஆச்சு என்று கேட்டாள். காய்ச்சல் மருத்துவமனையில்
சேர்த்திருக்கோம், 1000 ஆயிரம் ரூபாய் பணம் வேணுமின்னு அழகம்மாவின் சுருக்குபையை எடை
போட்டது போல, மொத்தத்தையும் கேட்டான். பேரன் மீதுள்ள பாசத்தால், பணம் முழுவதையும் கொடுத்து
அனுப்பினாள். அதன் பிறகு, ஏதோவொரு காரணம் சொல்லி மாதம் ஒருமுறை, பணம் பெறுவதை வழக்கமாக்கி
கொண்டான். அழகம்மாவும், தன் சம்பாதிக்கிறதே அவங்களுக்குத்தான் எனத் தன் செலவைக் குறைத்துப்
பணத்தை மிச்சம் செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.
தன்னால் முடியாவிட்டாலும்,
தன் மகன் மற்றும் பேரனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறாள், இனிமேலும் உழைப்பாள் அழகம்மா.
அழகம்மா மட்டுமில்ல, பொறுப்பில்லா கணவன் கொண்ட அழகம்மாக்களும், பொறுப்பற்ற பிள்ளைகளைப்
பெற்ற அழகப்பன்களும்.
முற்றும்.