நேர்மை பழகு

கண்ணன் வீட்டுக்குள் நுழைந்ததுமேதீபா தன் பேச்சைத் தொடங்கினாள்.

"என்னங்கநம்மவீட்டுக்குப் பக்கத்தில இருக்காங்கள்ல"

"யாருஎன கண்ணன் கேட்க, "அதாங்க உங்ககூட ஒன்னா வேலை பாக்குறாரே குமார்."

"ஆமாஇப்போ அவருக்கு என்ன?"

"இல்லங்கஅவரு வீட்டுக்கு இன்னைக்குப் புதுசா காரு வந்துச்சு

"சரி,  அதுக்கென்ன யாராவது சொந்தகாரங்க வந்திருப்பாங்க."

"அடஇல்லைங்க அவுங்க புதுசா வாங்கியிருக்காங்களாம்!"

"உனக்கு எப்படி தெரியும்?"

"அவுங்க மனைவி லீலா வந்துஎன்னைக் கூட்டிட்டுப் போய்க் காட்டுனாங்க. அதுமட்டுமில்லங்கவீட்டுக்குப் புதுசா எல்லா electronics பொருட்களும் வாங்கியிருக்காங்க!"

"சரிஇப்போ நான் என்ன செய்யணும்னு சொல்ற?

"ஒன்னுமில்லைங்கநம்ம வீட்டுல ரொம்ப நாளா துணி துவைக்கிற வாஷிங் மெஷின் சிக்கல் செய்யுதுஅத மாத்திட்டுப் புதுசா ஒன்னும் வாங்கலாம்ங்க.

"தீபாநீ சொல்றது எனக்குப் புரியுது. ஆனாவாங்குற  25000 ரூபாய் சம்பளத்தில 10000 ரூபாய் வீடு கட்ட வாங்கின கடனுக்குப் போயிடுது. அப்புறம் வீட்டுச் செலவுபிள்ள படிப்புனு காசு செலவாகிடுது. கொஞ்ச நாள் பொறுமையா இரு. தீபாவளிக்கு போனஸ் தருவாங்க, அதில வேற செலவு இல்லைன்னா வாங்குவோம்எனச் சொல்லி முடிப்பதற்குள் தீபா, "இந்த வீட்டுல நாம பேச்ச யாரு மதிக்கிறா?" என்று முனுமுனுத்துக் கொண்டே அடுப்படிக்குச் சென்றிருந்தாள்.

கண்ணனுக்கும் தெரியும்இதுபோல தீபா பல முறை வாஷிங்மெஷின், தொலைக்காட்சிகைப்பேசி என்று கேட்டிருக்கிறாள். ஆனால்வாங்கி தரமுடியாது எனச் சொல்லாமல்நாளாகட்டும் என்பதே பதிலாக இருந்தது. இன்றும் அதே பதில்தான். ஆனால்இந்த முறை தீபா கோவமடைந்தது, கண்ணனுக்கு முதல் முறையாக வருத்தத்தைக் கொடுத்ததுஅப்படியே சாய்வு நாற்காலியில் கண்ணயர்ந்த நேரத்தில் வந்த தீபா, "வாங்கசாப்பிடலாம்" எனக்கூற, "மதன்எங்க?" என்றுகேட்டான்கண்ணன்.

"அவன் அப்பயே சாப்பிட்டு தூங்கிட்டான்."

"சரிஎடுத்துவை" என்று சொல்லிக் கண்ணனும்தீபாவும் இரவு உணவை முடித்து உறங்கச் சென்றபொழுதுமீண்டும் தீபாதன்பேச்சை எடுக்ககாதில் வாங்காதவாறு கண்ணன் திரும்பி படுத்ததும், மீண்டும் சிறு முனுமுனுப்பலோடு தீபாவும் கண்ணயர்ந்தாள்.

விடிந்ததும் பரபரப்பு தொற்றிக் கொள்ளமதனைப் பள்ளிக்குக் கிளப்பியும்கண்ணனுக்கு உணவு எடுத்து வைத்தும்பம்பரமாய்ச் சுழன்றுக் கொண்டிருந்தாள் தீபா. கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பும் எல்லா நாட்களும் வாசல்வரை வந்து வழியனுப்புபவள்இன்று தலையைமட்டும் அசைத்து விடைகொடுக்கதன்மகனை அழைத்துக்கொண்டு, தானும் கிளம்பினான் கண்ணன். மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு, சரியாக 9.30 மணிக்கு அலுவலகத்தில் நுழையஉதவியாளர், "வணக்கம்!" எனச் சொல்லசிரித்து கொண்டே வணக்கம் சொல்லி தனது இருக்கையில் அமர்ந்தான். அங்குகண்ணனைத் தவிர யாருமில்லை. ஏனென்றால்அரசு அலுவலகம்என்பதால்எல்லோரும் தாமதமாகவே வருவார்கள். ஆனால்கண்ணன் மட்டுமே மழையானாலும், வெயிலானாலும் சரியாக வந்துவிடுவான்.

****
சிலநாட்களுக்கு முன்...

அன்றும் அதுபோல அமைதியாகவே தொடங்கியது. மணி 12 ஐ தொட்டபோது சக்திவேலு பொறியாளரைப் பார்க்க அலுவலகத்தில் நுழையவும் எல்லோரும் வணக்கம் சொல்லி அமர்ந்தனர். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் "யாருஇவரு?" எனப் பக்கத்தில இருக்கிறவர்கிட்ட கேட்க, இவருதான் சக்திவேலு" என்று சொல்லத் தொடங்கியவர், குரலைத் தாழ்த்தி "அண்ணாச்சி" என்றார். அதே சன்னமான குரலில், "முன்னாடி கட்டப் பஞ்சாயத்து, வட்டி தொழிலிலு செஞ்சுகிட்டு இருந்தவருஇப்ப அதெல்லாம் விட்டுட்டு பெரிய பெரிய அடுக்குமாடிக் கட்டிடம் கட்டி விக்க தொடங்கிட்டாரு. அப்பேலிருந்தே அவர அண்ணாச்சினு கூப்பிட்டனால இப்பவும் அதே தொடருது" என்றுமுடித்தார். பொறியாளர் அறையிலிருந்து அழைப்புமணி ஒலிக்கஉதவியாளர் நுழைந்தவுடனே வெளியேறிநேராக உதவிப் பொறியாளர் கண்ணனை அழைக்கச் சென்றார்.

கண்ணன் அறைக்குள் நுழைந்து குமாருக்கு வணக்கம் வைக்க எதிரே கால் மேல் கால் போட்டு சக்திவேலு அமர்ந்திருந்தார். குமார் சற்று செருமிய குரலுடன்இவர் பேரு சக்திவேலு கட்டிடத் தொழில் செய்யாரு. நம்ம வேப்பங்குளம் பக்கத்தில புதிய கட்டிடம் கட்டுறதுக்கு ஒப்புதல் வாங்க வந்திருக்காரு. பாத்துசெஞ்சுகுடுங்க."

கண்ணன், "உடனே இடத்தோட வரைப்படம்மூலபத்திரம்பட்டா வில்லங்கச்சான்றுஉங்களோடு அடையாள அட்டைக் கொடுத்தீங்கனா, சரிபார்த்துட்டு கொடுத்திடுறேன் அப்படின்னு ஏற்கனவே உங்க ஆளுங்ககிட்ட சொல்லி அனுப்பிட்டேனே" என்றுசொன்னார்.

"என்ன பொறியாளரே! நீங்க எதுவும் சொல்லலையா?" என அண்ணாச்சி சிரித்துக் கொண்டே கூற, உடனே குமார், "அதான் நான் சொல்லிட்டேன்ல, ஒப்புதல்னு போட்டு கொண்டுவாங்க, கண்ணன்." என்றார்.

"இல்லைஅதுதப்புங்க" என்று கண்ணன் சொல்லவேறு வழியில்லாத குமார், "சரி நீங்க போங்க" என்று அனுப்பிவிட்டான்.

கண்ணன் போனதும் சக்திவேலுவிடம், "இந்தாளு இப்படிதாங்க நேர்மை, நீதின்னு சொல்லிட்டு இருப்பாராம். இவர் இந்நேரம் பொறியாளராகியிருக்க வேண்டியதுயாருக்கும் வளைஞ்சு கொடுக்காதனால பதவி உயர்வுதராம வச்சிருக்காங்க, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நாளைக்கு அந்தாளு விடுப்பு கொடுத்திருக்காருநானே கையெழுத்து போட்டு கொடுத்திடுறேன். அப்புறம்நான்கேட்டதெல்லாம்..." என்று இழுக்க, "இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுல எல்லாம் இருக்கும்" என்று சக்திவேலு கிளம்பிச் சென்றுவிட்டார்.

****

இன்று

10 மணியானதும் ஒவ்வொருத்தராக நுழைய அலுவலகம் களைகட்டத் தொடங்கியது. அவர்கள் பேச்சு முழுக்ககுமார் வாங்கிய புதுகாரைப் பற்றியே இருந்தது. அதில்சிலர் வெளிப்படையாகவே 'நேர்மையா உழைச்சா வாங்க முடியுமா?' என்று மனக் குமுறலையும் கொட்டினர்

"அண்ணாச்சிஅந்த வேப்பங்குளம் இடத்தில அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி கேட்டப்பநம்ம கண்ணன் துணைப் பொறியாளர் இருக்காரேபயணச் செலவுன்னு கணக்கு காட்டினா கூட எங்கு போனீங்க? என்ன வேலைஅப்படின்னு கேட்பாருசும்மா கையெழுத்து போடச்சொன்னா போட்டுருவாராஅதான்குமார் பொறியாளர் என்பதால் அண்ணாச்சியுடன் ஏதோ பேசிகண்ணனுக்கு விடுமுறைக் கொடுத்து, அங்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தாருல்லஅதுக்குப் பரிசாதான் இந்த புது வண்டி" என்று புறணியளக்ககுமாரின் வருகையைப் பார்த்த பின்பு பேசாமல் அமர்ந்து கொண்டனர். குமார் தனது பெயர் பொறித்த அறையில் சென்று அமர்ந்தார்.

அமைதியாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில்தீடீரென்று ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் நுழைய எல்லோரும் விக்கித்து நின்றனர். அதில் ஒருவர் யாரும் வெளியே போகக்கூடாதுதொலைபேசி எல்லாம் அணைச்சு வச்சுருங்கஎன்று சொல்லிவிட்டு "Engineer இருக்காரா?" என்று கேட்டதிற்குஇருக்காரு என்று ஒட்டுமொத்த ஊழியரும் சொல்ல, குமாரின் அறைக்குள் 3 பேர்நுழைந்தனர். அதேநேரம்,  "Assistant Engineer யாருஎங்க இருக்காருஅவரையும் வரச்சொல்லுங்க" என்றதும், கண்ணனும் எழுந்து அறைக்குள் சென்றார்.

"நாங்கஊழல் ஒழிப்பு துறையில இருந்து வரோம்கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேப்பங்குளம் இடத்துக்குநீங்க கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தீங்களா?" என்றதும்சிறிதும் யோசிக்காத கண்ணன், "இல்லைஅவுங்க சான்றுகள் சரியில்லைனு அனுப்பிட்டேன்" என்றார்.

"அப்டியா?" எனச் சிரித்துக்கொண்டேதனது உதவியாளரிடம் "அந்த கோப்புகாட்டுங்க" என்றார். அதைப் படித்து பார்த்த கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஐயாஅன்னைக்கு சக்திவேலு வந்து கேட்டதுக்குநான் முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்இது நான் ஒப்புதல் தரவே இல்லை." என்றார் கண்ணன்.  ஊழல் ஒழிப்பு அதிகாரி குமாரைப் பார்க்க, தலைக்குனிந்து அமர்ந்திருந்தான் குமார்.

"சரிநீங்க வெளியே காத்திருங்க" என்று கண்ணனை அனுப்பிவிட்டனர்.

"இப்பவாவது சொல்லுங்க குமார்ஏன் நீங்க கண்ணனுக்குத் தெரியாம அவருக்கு விடுமுறை கொடுத்து இப்படி செய்தீங்கஏற்கனவேநீங்க வேலை செய்த ஊர்களிலையும்இதேபோல செய்திருக்கீங்கனு புகார் வந்துகிட்டேதான் இருந்தது. அதுனாலஉங்களுக்கு தெரியாமலேயே நாங்க உங்களக் கண்காணிச்சுகிட்டேதான் இருந்தோம். நேத்துஉங்க வீட்டுக்குப் புதிய பொருட்களும்காரும் வந்திறங்கியது முதல் எங்களுக்குத் தெரியும்" என்று சொன்னதும்குமாருக்கு வேர்க்கத் தொடங்கியது. இதற்கு மேலும் மறைக்கமுடியாதுனு தெரிஞ்சதுக்கப்புறம் நடிக்கிற பயனில்லை என்று உணர்ந்து குமார் தலைநிமிராமலேயே, 'நான் பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்தேன். கண்ணன் நேர்மையான ஆளுநான் கையெழுத்து போடசொன்னப்போ அவருபோடலஅதான் அவரை விடுப்புல அனுப்பிட்டு நானே ஒப்புதல் கொடுத்திட்டேன்' எனச் சொன்னான்.

"குற்றத்தை நீங்களே ஒத்துக்கிட்டனாலஎங்க வேலை எளிமையா முடிந்ததுசரி வாங்க போலாம்" என்று குமாரையும் அழைத்துச் செல்ல முற்பட்டபொழுதுகண்ணனைப் பார்த்துக் கொண்டே குற்றவுணர்வுடன் சென்றான் குமார். எல்லோரும்என்ன நடக்குதுன்னு புரியாமல் நின்றனர். அன்று முழுவதும் அதே பேச்சாகக் கழிந்தது.

வழக்கம் போல வீட்டுக்கு வந்த கண்ணனைப் பார்த்து, "என்னங்க!" என்று தீபா தொடங்கஇன்று எதைச் சொல்ல போறாளோஎன்று யோசித்துவிட்டு "என்னம்மா" என்றார் கண்ணன்.

"உங்ககூட வேலை பாக்குறாரே குமார்அவர இன்னைக்கு ஊழல்வழக்குல உள்ள போட்டுட்டாங்களாம்."

"அதுஉனக்கு எப்படி தெரியும்?" என்று கண்ணன் கேட்க, "உள்ளுர் தொலைக்காட்சி செய்தில ஒன்னுவிடாம எல்லாத்தையும் சொன்னாங்கங்க. அந்த பணத்திலதான்எல்லாப் பொருளும்காரும் உட்பட வாங்கியிருக்காங்களாம். இதுபோககணக்குலவராத 10 லட்சம் பணமும் பறிமுதல் பண்ணிருங்காங்களாம். காருவாங்கினப்போ மட்டும் அந்த லீலா அப்டி பேசினாளேஇப்பபாருங்கவீட்டுக்குள்ளேயே அடைஞ்சிருக்கா. நீங்க சொன்னப்ப புரியலஎனக்கு இப்போதாங்க புரியுதுநாம மட்டும் நீதிநேர்மையிருந்தா எல்லாம் சரியாகிடுமான்னு, நானே பலமுறை உங்கள மனசிலயே திட்டிருக்கேன்நாமளும்அதுமாதிரி தவறான வழியில போயிருந்தாபொருள் கிடைச்சிருக்கும். ஆனால்ஊருக்குள்ள மதிப்புமரியாதைய இழந்து வெளிய தலைக்காட்ட முடியாம நின்றிருப்போம்" என்று சொல்லி,  கண்ணனைக் கண்ணீருடன் கட்டித் தழுவிக்கொண்டாள்


"நாம இருந்தாலும்இல்லைனாலும் நம்மள வச்சுத்தான் நம்ம குழந்தைகளை இந்த சமூகம் மதிக்கும். ஆடம்பர பொருளுக்காக நாம இதை செய்திருந்தா நம்ம குழந்தைகளுக்கு நீங்கா அவப்பெயரை தந்திருப்போம்" என்று கண்ணன்கூற தீபாவும் 'ஆமா' என்பதுபோல் தலையசைத்தாள்.

குறள் 240:

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

விளக்க உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

Comments