அலைபேசி சிணுங்கிய ஒலிகேட்டு, “குட்டி, யாருன்னு பாருப்பா” என்று அடுப்படியிலிருந்து சுதா குரல் கொடுக்க, அலைபேசியை எடுத்து தன் மழலைமாறா மொழியில், "யாரு?" என்றாள் அபி.
"அபி செல்லம், அப்பாதாம்மா பேசுறேன். நானும், அலுவலகத்தில வேலை செய்யும் மாமா ஒருவரும் வீட்டுக்கு வர்றோம்னு, அம்மாகிட்டு சொல்லு கண்ணு," என்று அவளைப் போலவே குழைந்து பேசினார் சங்கர். "சரிங்கப்பா" என்று அடுப்படியிலிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு, தனது வீட்டுப்பாடத்தை எழுதத் தொடங்கியது அந்த குட்டி தேவதை. சுதாவும், வருகிறவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கும் வேளை, வீட்டு அழைப்பு மணி ஒலிக்க வாயில் கதவைச் சற்று திறந்து தன் கணவனென்று உறுதி படுத்திய பின்பு, கதவைத் திறந்து "வாங்க" என்றவுடன் சங்கர், தனது நண்பனான சுரேஷை "உள்ள வாடா" என்றான். சுதாவும், "வாங்க அண்ணா" என வரவேற்க, புன்னகைத்தவாறு வீட்டுக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தான் சுரேஷ்..
"இருங்க, குடிக்க தண்ணி கொண்டுவரேன்" என்று சொல்லி, சுதா அடுப்படிக்குச் செல்ல அந்நேரம் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டு, "அப்பா" என சங்கரைக் கட்டி தழுவிக்கொண்டாள் அபி. "இவர்தான் சுரேஷ் மாமா" என்றவுடன் “வணக்கம் மாமா” என்ற அபியைப் பார்த்து வியப்படைந்தான் சுரேஷ். 'தன் மகள் தன்யாவுக்கும் இதே வயதுதானிருக்கும், பெரியவர்களைப் பார்த்து மரியாதைச் செலுத்துகிறாளே!'
"இங்க வாம்மா" என்று சுரேஷ் அபியை மடியில் உட்கார அழைக்க, அருகினில் நின்ற அபி “மாமா யாரு மடியிலும் அமரக்கூடாதுன்னு அம்மா சொல்லிக் குடுத்திருக்காங்க” என்றதும், "அட, சங்கர் குழந்தையை நல்லா வளர்க்கிறீங்க" என்றதும், "அதெல்லாம் என் மனைவி சுதாவோட கட்டுப்பாடுதான்." என்றான் சங்கர். இவர்கள் பேசி முடிக்கவும், சுதா தேநீரும், வடையும் கொண்டுவரவும் சரியாக இருந்தது.
தேநீரை வாங்காமல் சில நொடிகள் சுதாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ் “தேநீர் எடுத்துக்கோங்கண்ணா” என்று இரு முறை சொல்லிவிட்டாள். சங்கர், சுரேஷின் கைகளைப் பற்றவும் தன்னிலை உணர்ந்து தேநீரை வாங்கிக் கொண்டான். இருவரும் அலுவலகம், அன்றாடம், அரசியல் என பல தளங்களில் பேசிக்கொண்டிருக்க, மணி எட்டை அடைந்திருந்தது. "சரி நான் கிளம்புறேன்" என சுரேஷ் கிளம்ப எத்தனிக்க, சங்கர், "சுதா, இங்க வா சுரேஷ் கிளம்புறாராம்" என்று சொன்னார் சங்கர். அடுப்படியிலிருந்து பாத்திரம் தேய்ச்சிட்டிருக்கேன்னு குரல் வந்ததும், "சரி பரவாயில்லை" என்று சுரேஷ் புறப்பட்டுச் சென்றான்.
தலையை எட்டிப் பார்த்து உறுதி செய்த பின்பு, சுதா வெளியே வந்து, "ஏங்க அந்த ஆளோட பார்வையே சரியில்ல" என்றாள். "இல்லமா, சுரேஷ் ரொம்ப மரியாதையான ஆளு" என்று சொல்லிப் பேச்சை முடித்தான் சங்கர். எப்பொழுதும் போல நாட்கள் நகர, ஒரு நாள் சுதாவுக்குத் தெரியாத எண்ணிலிருந்து அலைபேசி வர எடுத்து யாரென்று கேட்பதற்குள், "நான்தாம்மா" என்று சங்கர் மொழிந்தான். "இன்னைக்கு ஒரு வாடிக்கையாளரப் பாக்கப் போறோம்னு தெரியாம என்னோட அலைபேசிய அலுவலகத்திலேயே விட்டுட்டேன். இது சுரேஷ் அலைபேசி, நான் வர கொஞ்சம் நேரமாகும் சாப்பிட்டு தூங்குங்க, என்கிட்ட வீட்டு சாவி இருக்கு நான் தொறந்துக்கிறேன்" என்று சொல்ல, சுதாவின் "சரிங்க"க்குப் பின் அழைப்பைத் துண்டித்தான்.
சுதா ஆறு மணிக்கு எழும்போது, சங்கர் தனது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்க, "என்னங்க, இரவு எப்ப வந்தீங்க? காலையில நான் எழுப்பினாகூட எழ மாட்டீங்க? இப்ப என்னடானா வேலை செய்றீங்க?" என்றாள். "ஒரு மணிக்குத்தான் வந்தேன், அந்த வாடிக்கையாளர் இன்னைக்கு பத்து மணிக்குள்ள இந்த வேலையை முடிக்கணும்னு சொல்லிட்டாரு அதான்" என்று மடிக்கணினியிலிருந்து தலையைத் திருப்பாமல் பதிலுரைத்தான் சங்கர். சுதா எழுந்து சென்று தேநீர் போட்டு கொண்டு வந்தாள். தேநீர்க் கோப்பையை வாங்கிய சங்கர் “நன்றி” என்று சொல்லிக் கொண்டே வேலையைத் தொடர தன் அன்றாடப் பணிகளைத் தொடங்கினாள் சுதா. "அபி, எழுந்திரு, பள்ளிக்கு போகணுமில்ல?" என்று மகளை எழுப்பிவிட்டு, சமையல் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அபியைப் பள்ளிக்குச் செல்ல ஆயத்தம் செய்து, உணவு ஊட்டி, பள்ளி வண்டி வாசலில் ஒலி எழுப்பியவுடன் , அபியை வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, கணவனுக்கு மதிய உணவை எடுத்து வைத்து, அவனை அலுவலகத்துக்கு அனுப்பி, 'இனி ஒய்வு தான்' என வரவேற்பறையின் பஞ்சிருக்கையில் அயர்ந்து அமர்ந்த போது, அலைபேசி 'டிங்' என்றது.
அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அதிலே, 'வணக்கம்' என்று தெரியாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. யாரோ தவறுதலாக அனுப்பியிருப்பார்கள் என விட்டுவிட்டாள். மீண்டும் இரவு, அதே எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. சுதா குழம்பினாள் "யார்னு தெரியலையே, பேசுவோமா?" என்று நினைத்தவள் சட்டென்று வேண்டாமென முடிவு செய்தாள். இரண்டு நாட்களாகவே, இதுபோல் 'வணக்கம்' குறுஞ்செய்தி உள்பெட்டியை நிரப்பியது. அவளும் பெரிதாகக் கண்டுக்கொள்ளாது விட்டுவிட்டாள். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, 'என்ன சுதா, பேச மாட்றீங்க' என்றதும், சற்று அதிர்ச்சியானவள், 'யாரா இருக்கும்' எனச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், சட்டெனப் பொறி தட்டியது. 'அன்னைக்கு தன் கணவர் சுரேஷ் எண்ணிலிருந்து பேசினாரே' என்று உடனே அழைப்புப் பட்டியலைப் பார்க்க அதே எண். தன் கணவர் மேல் சினம் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை. 'இன்னைக்கு வரட்டும்' என எண்ணிக் கொண்டிருக்கையில் ஒருவேளை நம்மை ஏதாவது தவறாக நினைத்துவிடுவாரோ என்ற எண்ணமும் வர ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் ஏதோ ஒலி கேட்பதைப்போல் உணர, தன் அலைபேசி கத்திக் கொண்டிருப்பதை எடுப்பதற்குள் நின்று போனது. அதே வேளை வாயில் கதவு தட்டப்படும் ஒலி கேட்டு, அங்கு விரைந்து கதவை திறக்க, "என்ன பண்ணிட்டு இருக்க? அலைபேசியும் எடுக்கல? பத்து நிமிடமா அழைப்பு மணி அடிக்கிறேன்" சொல்லிக் கொண்டே, "சரி கிளம்பு" என்றார் சங்கர். "எங்கே?" எனக் கேட்ட சுதாவை, மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மாப்பிள்ளை பேசினாரு. "என்னாச்சு அப்பாவுக்கு?" என்று கலங்கிய கண்களோடு கேட்ட சுதாவை, "நெஞ்சு வலிக்குதுனு சொல்லி இருக்காரு, உடனே மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு போயிட்டாங்களாம். அதனால எந்தச் சிக்கலும் இப்ப இல்லை, நல்லா இருக்காராம். அபியும் கூட்டிட்டு வா போயி பாத்திட்டு வந்திடலாம்" என்று மூவரும் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றனர். போட்டது போட்டபடி கிளம்பியதில் தனது அலைபேசியை எடுத்துக் கொள்ள மறந்திருந்தாள் சுதா. முனைப்புக் கவனிப்புப் பிரிவில் வைத்திருக்கும் தந்தையைத் வெளியில் இருந்து பார்த்துவிட்டு, தன் தாய்க்கு ஆறுதல் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுதா. சங்கரும் சுதாவின் தம்பி மோகனிடம் பேசிக் கொண்டிருந்தான். அப்போது, சங்கருக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர, "சரி, சுதா அம்மாகூட இருந்து பாத்துக்க, அப்பா வீட்டுக்கு வந்ததும் வா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். மூன்று நாட்கள் சுதா அம்மா வீட்டிலேயே தங்கிவிட்டாள்.
நான்காவது நாள், காலையிலேயே, "இன்னைக்கு வந்துடுறேங்க"னு சங்கருக்கு தம்பியின் அலைபேசியிலிருந்து தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பி சுதா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்ததும், தனது அலைபேசியை எடுத்து "தம்பி, வந்து சேர்ந்துவிட்டேன், அப்பாவ பாத்துக்க, அம்மாகிட்டயும் சொல்லிடு" என்று சொல்லிவிட்டு பஞ்சிருக்கையில் சரிந்தாள்.
'சரி, கொஞ்ச நேரம் அலைபேசியில் வாட்சப் குறுஞ்செய்திகளைப் பார்ப்போம் என இணையத்தை இணைத்ததும், செயலிகளின் குறுஞ்செய்திகள் வந்து விழுந்தன. தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சியாய், மீண்டும் சுரேஷ் எண்ணிலிருந்து குறுஞ்செய்திகள். ஆனால், இம்முறை சற்று முகம் சுழிக்க வைக்கும் புகைப்படங்களும் வந்திருந்தன. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் தன் கணவரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்ததும், அதனால்தான் அன்று தம்பி அழைப்பை எடுக்க முடியவில்லை என்ற கோபமும் சேர்ந்து கொண்டது. இம்முறை கடுஞ்சினத்தில் இருந்த சுதா அலைபேசியைத் திட்டுவதற்கு எடுத்த நேரத்தில், சரியாக அதே எண்ணிலிருந்து அழைப்பு.
அழைப்பை எடுத்த சுதா வெடித்தாள், "டேய், நான் உன் நண்பரோட மனைவி ஏன்டா, இதுமாதிரியெல்லாம் அனுப்புற?", என்று கேட்க, ஏதும் நடக்காததுபோல, "உங்க வீட்டுக்கு வந்தப்பவே உங்கள பிடிச்சிருச்சு" என்று சொன்னான் சுரேஷ். 'இனி பேசி பயனில்லை' எனப் புரிந்துக் கொண்டு, "என் கணவரிடம் சொல்லிவிடுவேன்", என மிரட்டினாள். ஆனால், அவனோ எதற்கும் அஞ்சாமல், "சொன்னா உன் மானமும் சேர்ந்து தான் போகும்" என சொல்லிச் சிரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான். அவன்மேல் கோபம் ஒருபக்கம் எழுந்தாலும், அவன் சொன்னதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினாள். தன் கணவரிடம் சொல்லி அவர் நம்மைத் திட்டினாள் என்ன செய்வது என பலக் கேள்விகள் எழ சற்றே தடுமாறிப் போயிருந்தாள்.
வாயில் மணி ஒலிக்க தன் கணவனை வரவேற்றாள். "என்னம்மா, முகம் ஒரு மாதிரி இருக்கு, என்னாச்சு? மறுபடியும் மாமாவுக்கு ஏதும் உடல்நிலை சரியில்லையா?" என சங்கர் கேட்க, "ஒன்னும் இல்லைங்க" என சொல்லிவிட்டு, சாப்பாடு எடுத்து வைக்க சென்றுவிட்டாள். சாப்பிடும்போது 'கேட்கலாமா?' என்று சிந்திக்கும் வேளையில், "நாளைக்கு நேரத்துலையே போகணும்மா, வாடிக்கையாளர் வரேன்னு சொல்லியிருக்காரு" என்று சங்கர் கூற, இப்போது வேண்டாம் என முடிவெடுத்தாள். இரவு தூங்காமல் இந்தச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென சிந்தித்துக் கொண்டிருந்தவள் தூங்கியும் விட்டாள். காலை விழித்துப் பார்க்கையில் குளித்து முடித்து சங்கர் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
"என்னங்க, அதுக்குள்ள கிளம்பிட்டிங்க?"
"மணி எட்டு ஆகுது, அபியைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிட்டேன், நேற்றிரவே சொன்னேன்ல நேரத்துலையே போகணும்மா வாடிக்கையாளர் வரேன்னு சொல்லியிருக்காருனு, ரொம்ப நாள் கழிச்சு, அசந்து தூங்குன, அதான் உன்ன எழுப்பல, ப்ரெட் ஆம்லெட் செஞ்சு வச்சிருக்கேன், நான் கிளம்புறேன்" என்று கூறிக் கிளம்பினான் சங்கர்.
தேநீர்க் குவளையுடன் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி தொடரை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதில், ஒரு காட்சியில் எதிரி பேசுவதை அவனுக்குத் தெரியாமல் அலைபேசியில் பதிவு செய்தான் நாயகன். அது, அவளுக்கு நல்ல ஆலோசனையாகப்படவே, அடுத்து அழைப்பு வந்தால் குரல் பதிவைச் செய்வதெனத் தீர்மானித்தாள்.
மதியம் ஒரு மணி இருக்கும், கையில் வைத்திருந்த அலைபேசி அதிர்ந்தது அதே எண்ணிலிருந்து அழைப்பு. சற்றுத் துணிவுடன் அழைப்பை எடுத்து, சேமிக்கும் பொத்தானைச் சொடுக்கி "யாரு பேசுறது?" என்றாள்.
"நான்தான்"
"நான்தான்னா யாருங்க?"
"சுரேஷ் பேசுறேன் செல்லம்"
"உங்களுக்கு எத்தனைத் தடவ சொன்னாலும் புத்தி வராதா? நான் என் கணவனிடம் சொல்லிடுவேன்" என்று சுதா கூற, சிரித்துக் கொண்டே "உன்னால சொல்ல முடியாது, சொன்னா உனக்குத்தான் கெட்டப் பேரு," என்றான் சுரேஷ். இதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சுதா, "உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு, இப்ப சிரிக்குற நீ ஏன்டா தேவையில்லாம இந்த பொண்ணுகிட்ட இப்படி நடந்தோம்னு வருத்தப்படுவடா" என்று கூற, "உன்னால என்னை ஒன்னும் பண்ணமுடியாது" எனக் கூறி மேலும் சிரித்தான். அதற்கு மேலும் அவன் சிரிப்புத் தாங்க முடியாது கோபத்தில் அழைப்பைத் துண்டித்தாள். துண்டித்தவுடன் குரல் பதிவு சரியாக சேமிக்கப்பட்டுள்ளதாவெனச் சரிபார்த்து நிம்மதியடைந்தாள். நான்கு மணிக்கு அபி பள்ளியில் இருந்து வர, அவளுக்கு சிற்றுண்டி கொடுத்து, படிக்கச் சொல்லிவிட்டு இரவு கணவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
இன்று ஆறரை மணிக்கே சங்கர் வந்திருந்தான். வீட்டின் உள்ளே நுழைந்தவன் சுதாவின் முகத்தைப் பார்த்ததும், "என்னாச்சுமா? நானும் இரண்டு நாளா பார்க்கிறேன், முகமே சரியில்ல, ஏதோ உன் மனசுல வச்சுட்டு இருக்க, எதுவா இருந்தாலும் சொல்லுடா" என அவளின் கன்னத்தில் கை வைத்துச் சொல்ல, கண்கள் கலங்கி, கன்னத்தில் இருக்கும் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள் சுதா. சங்கருக்கு விளங்கி விட்டது, சுதாவின் தவிப்பு. சுதா தனது அலைபேசியை எடுத்து, வந்த குறுஞ்செய்தி, புகைப்படம், குரல் பதிவு எல்லாவற்றையும் காட்டினாள். அமைதியாக பார்த்துவிட்டு, "இதுல உன் தப்பேதும் இல்லையே! நீ ஏன் அழுவுற? குழந்தை பாக்கப் போறா" என்று கண்ணீரைத் துடைத்தான்.
"சரி, அபி எங்க?"
"படிச்சிட்டு இருக்கா"
"சரி சாப்பாடு ஏதும் செய்திருக்கியா?"
"இல்லங்க, இருங்க இப்போ செய்திடுறேன்."
"அதெல்லாம் வேணா, வா வெளியே போயிட்டு வரலாம்"
சிறிது நேரத்தில் மூவரும் வண்டியில் கிளம்பி முதலில் பூங்காவுக்குச் சென்று சிறிது நேரம் விளையாடிவிட்டு, பின் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினர்.
"சுதா, போகிற வழியில ஒரு நண்பரைப் பார்த்துட்டுப் போயிடலாம்" என்றான் சங்கர்.
திகைத்துப் போய் சில நொடிகள் பேசாதிருந்த சுதாவிடம், "கண்டிப்பாக சுரேஷ் இல்லை, பத்தே நிமிடம் தான்"
மெல்லச் சிரித்து, "சரிங்க" என்றாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் K9 காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினான் சங்கர். "என்னங்க! நண்பரப் பார்க்க போறோம்னு சொன்னீங்க, இங்க வந்திருக்கீங்க," என்ற சுதாவிடம், "காவல் துறை உங்கள் நண்பன்" என்றான் சங்கர்.
எழுத்தர், தலைமைக் காவலர் அனைவரிடமும் சொல்லி சில நிமிடங்களில் ஆய்வாளர் முன் நின்றிருந்தனர் சங்கரும், சுதாவும் கையில் உறங்கிக் கொண்டிருக்கும் அபியோடு.
"வணக்கம், உட்காருங்க, உங்களுக்கு என்ன வேணும்?" என்றார் ஆய்வாளர்.
"இவுங்க என் மனைவி சுதா, இவங்க அலைபேசிக்கு என் அலுவலகத்தில வேலை செய்யற சுரேஷ் என்பவர், தவறான குறுஞ்செய்தி, ஆபாச படங்கள், அனுப்பி தொந்தரவு செய்திருக்காரு, அதுமட்டுமில்லாம பேசிய குரல் பதிவு ஆதாரம் இருக்கு" என்றார் சங்கர்.
"இப்படிதான் இருக்கணும்", ஆய்வாளர் முகத்தில் மகிழ்ச்சியுடன், "தன் வீட்டுப் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் போது அவங்களுக்கு துணையா வந்து நிக்கணும். நீங்க தாள்ல முழுவிபரத்தையும் எழுதுங்க நாங்க பார்த்துக்கிறோம்" என்றதும், "நன்றிங்க" எனச் சொன்னார்கள். வெளியே வந்து வாக்குமூலம் எழுதிக் கொடுத்துவிட்டு வண்டியை எடுக்கப் போன சங்கரை இறுகக் கட்டிக்கொண்டாள் சுதா. "ஏய்! என்ன?" என்ற சங்கரின் கன்னத்தில் முத்தமிட்டு, "நன்றிங்க" என்று சொன்னாள்.
"நன்றியா? இத இத்தனை நாளா என்கிட்ட ஏன் சொல்லலன்னு உன்மேல செம்ம கோவத்துல இருக்கேன்" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கூறியவன், சில நொடிகளில் மெல்லப் புன்னகைத்து, "என்கிட்ட சொல்ல நம்பிக்கை வர இத்தனை நாளாயிருக்கு, இனிமே எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடுவ இல்லையா?"
"ம்ம்ம்" எனத் தலையசைத்து, முகத்தில் புன்னகையோடு, நனைந்த விழியோடு ஆதரவாய் அவன் கைகளைப் பற்றியிருந்தாள் சுதா.
*****
மறுநாள் காலை ஏழரை மணிக்கு, சுரேஷின் எண்ணுக்கு அழைப்பு வர, சுரேஷின் மனைவி எடுத்து, "ஹலோ" என்றாள். கரகரப்பான குரல் ஒன்று மறுமுனையில், "சுரேஷ் இருக்காரா?" என்றது.
"குளிச்சுட்டு இருக்காரு, நீங்க யாரு?"
"அவரை உடனே கிளம்பி K9 போலீஸ் ஸ்டேஷன்க்கு வரச் சொல்லுங்க?"
"ஏன், என்ன ஆச்சு?"
"எல்லாத்தையும் போன்லயே சொல்ல முடியாது, உடனே வரச் சொல்லுங்க" மறுமுனை துண்டிக்கப்பட்டது. சுரேஷின் மனைவி, "என்னங்க, உங்களைப் போலீஸ் ஸ்டேஷன்க்கு வரச் சொல்லிருக்காங்க, போன் வந்துச்சு." எனக் கூற, கதவைத் திறந்து, "என்னடி சொல்ற?" என்றான் சுரேஷ். "இப்பத்தான் வந்துச்சு, ஒன்னும் காரணம் சொல்லல, உடனே வந்து பாக்கச் சொல்லிருக்காங்க" என்றாள். சில நிமிடங்களில் கிளம்பி, "நான் போயி என்னன்னு பாத்துட்டு வர்றேன்" என்று கிளம்பியவனிடம், "நானும் வர்றேன்" என்றாள் சுரேஷின் மனைவி. "நீ அங்க வந்து என்னடி செய்யப் போற? எதுக்கு கூப்டாங்கன்னே தெரியல" என்றவன் சற்று யோசித்தவனாய், "சரி, தன்யாவையும் கூட்டிட்டு வா" என்றான்.
காலை எட்டு பத்துக்கு K-9 காவல் நிலையத்துக்குள் நுழைந்த சுரேஷ், தலைமைக் காவலரிடம், "என் பேரு சுரேஷ், ஸ்டேஷன்லேந்து வந்து பாக்கச் சொல்லி போன் வந்துச்சு." எனக் கூற, "ஓ, சுரேஷ், அப்படி பென்சுல உட்காருங்க, அய்யாகிட்ட சொல்றேன்" என்று உள்ளே சென்றார்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பின், ஆய்வாளர் அறையில் இருந்து, "சுரேஷ் வந்தாச்சா?" என்று குரல் வர, சுரேஷ் எழுந்தான். வெளியே வந்த தலைமைக் காவலர், "சுரேஷ் யாருப்பா? உள்ளே போங்க" என்றார்.
ஆய்வாளர் கண்ணால் சுரேஷை அளந்தபடி, முன்னே இருந்த நாற்காலியைக் காட்ட, சுரேஷ் அமர்ந்தான். "குழந்தையை வச்சுக்கிட்டு நிக்குறீங்களே உட்காருங்க" என்று சுரேஷின் மனைவியிடம் கூறிய ஆய்வாளர், "பேர் என்ன சொன்னீங்க, ஆங், சுரேஷ்ல, என்ன செய்யுறீங்க, சுரேஷ்?"
"ஒரு ப்ரைவேட் கம்பெனில வேலை செய்யுறேன். கஸ்டமர் சர்வீஸ் எக்சிகியூட்டிவ்"
"சங்கரைத் தெரியுமா?"
"ம், தெரியும் சார், என்கூட வேலை பாக்குறாரு"
"சுதாவைத் தெரியுமா?" சுரேஷின் கண்ணை உற்றுப் பார்த்தவாறே கேட்டார்.
"தெரியும், சங்கரோட மனைவி, ஒருமுறை அவங்க வீட்டுக்குப் போயிருக்கேன் மத்தபடி ஒன்னும் தெரியாது" என்றான் அவரது பார்வையைத் தவிர்த்தபடி.
"அவுங்க உங்க மேல Sec 354படி குற்றம் சுமத்தி வாக்குமூலம் கொடுத்திருக்காங்க."
இப்போது சுரேஷ் பேசாமலிருக்க, சுரேஷின் மனைவி "Sec 354 அப்படினா என்னங்க?" என்றாள்
"தவறாக பேசுதல், ஆபாச புகைப்படம், ஒலிநாடா அனுப்புதல் போன்ற குற்றம்மா" என்றதும்,"என் கணவர் அப்படியெல்லாம் செய்திருக்கமாட்டாரு" என்று சொன்னாள் சுரேஷின் மனைவி.
சிரித்துக் கொண்டே, "சார், உங்க போன் கொஞ்சம் தர்றீங்களா?" என்றார். சுரேஷ் பேயறைந்தது போல் அமர்ந்திருக்க, "சரி, நானே போட்டுக் காட்டுறேன்." என்று சுதாவுக்கும், சுரேஷிக்கும் நடந்த உரையாடல் பதிவை ஒலிப்பெருக்கியில் வைத்தார்.
'நான் சுரேஷ் பேசுறேன்' என்று சொன்னவுடன், சுரேஷின் மனைவியின் முகம் மாறியது. ஏனெனில், கேட்பது தன் கணவனுடைய குரலென அப்பட்டமாகத் தெரிந்தது. சுரேஷை முறைத்துவிட்டுத் திரும்பியவள், "ஐயா, நீங்க எந்த நடவடிக்கை வேணாலும் எடுங்க. நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ, இனிமே இங்க வரமாட்டோம். இதோ எனக்கும் பொண்ணு இருக்கு, இதுமாதிரி பெண்களிடம் தவறா நடந்துக்கிற ஆம்பளைய நம்பி, நான் எப்படி என் பொண்ண வீட்டுல விடுறது. தயவு செஞ்ச நீங்க நடவடிக்கை எடுங்க. அப்புறம் எனக்கு ஒரு உதவி மட்டும் செய்வீங்களா?" என்றாள்.
"சொல்லும்மா" என்றார் ஆய்வாளர்.
"வழக்கறிஞர்கிட்ட பேசி இன்னைக்கே விவகாரத்து வாங்கிறதுக்கு விண்ணப்பம் வாங்கிட்டு வரேன். அந்த விவகாரத்து விண்ணப்பத்தில கையெழுத்து மட்டும் வாங்கி கொடுத்திடுங்க. நான் படிச்சிருக்கேன், நானும் என் பொண்ணும், இந்த தரமில்லா மனிதர்கிட்ட விடுதலை பெறணும்." என்று சொல்லிவிட்டு, தன்யாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள். பின்னால், ஆய்வாளர், "ஏட்டு, இவர்கிட்டேந்து மொபைல் போன் Confiscate செய்யுங்க" என்று சொன்னது காதில் விழுந்தது. வெளியில் வந்த அவளின் முன் நிற்காது ஓடிக் கொண்டிருக்கும் நகரம் முன் நிற்க, சில நொடிகள் அங்கேயே நின்றவள், மெல்ல நடக்கத் தொடங்கினாள்.
குறள்
பகைபாவம் அச்சம்
பழியென நான்கும்
இகவாவாம்
இல்லிறப்பான் கண்.பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.