வெற்றிடம்


பசுமைத் தோட்டம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஓங்கி வளர்ந்த மரங்களும், பசுமை போர்த்திய புல் வெளிகளும் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் 500 வீடுகள் கொண்ட அழகிய ஊர். பேருந்து போக்குவரத்து அதிகம் இல்லாததால் சிற்றுந்தை மட்டுமே நம்பி இருக்கும் சிறிய ஊர். ஊருக்கு நடுவில் ஆரம்பச் சுகாதார நிலையம் , கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை என அமைய பெற்றது. உயர் நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. அது சுற்றி உள்ள 5 ஊருக்கும் அப்பள்ளியே கல்வியை வழங்குகிறது.

காலை நேரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது , அழைப்பு மணி ஒலிக்க அனைத்து சிறார்களும் பள்ளியை நோக்கி படை எடுக்கத் தொடங்கி இருந்தனர். திங்கள் கிழமை தோறும் பள்ளியில் அணிவகுப்பு நடைபெறும் நாள், அதற்காகத்தான் அவ்வளவு பரபரப்பு. கொஞ்சம் தாமதமானாலும் மாணவ தலைவன் ராஜா கடுமை காட்டுவான். ராஜா கிராம தலைவரின் புதல்வன். அவன் எந்த வகுப்பில் படிக்கிறானோ அதில் வகுப்பு தலைவன் பதவியையும் எடுத்துக் கொள்வான் தந்தை போலவே. இப்பொழுது 9 ம் வகுப்புப் படிக்கிறான், நன்றாகப் படிப்பதால் அவனை ஆசிரியர்களும் ஒன்றும் சொல்வதில்லை. அணிவகுப்பு முடிந்ததும் அனைத்து மாணவர்களும் வகுப்புக்கு கலைந்து சென்றனர். ரவி வாத்தியார் பாடம் எடுக்கத் தொடங்கி இருந்தார். அப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்தான் மணிகண்டன், அப்போது ரவி வாத்தியார் அவனைக் கண்டதும் உள்ள போய் உட்காருப்பா என்றதும், தன் நண்பன் பிரிட்டோ பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். இவ்வாறே போய்க் கொண்டிருந்த பள்ளியில், கருப்பையா அறிவியல் வாத்தியார் இடம் மாற்றம் பெற்று பள்ளியில் இருந்து விடை பெற்றார். அவரின் இடத்திற்குத் தலைமையாசிரியர் நீலமேகம் ஒருவரை அனைத்து வகுப்பிலும் அறிமுகம் செய்ய 9 வகுப்பிலும் வந்து இவர்தான் செல்வம் அறிவியல் வாத்தியார் என்று சொல்லிச் சென்றார். அவர் ஆறடி உயரம் பார்க்கவே கடுமையானவர் போலக் காட்சி தந்தார்.

மறுநாள் பள்ளி தொடங்கியதும் 9 வகுப்புக்கு வந்தார் செல்வம் வாத்தியார், மாணவர்கள் அனைவரும் அஞ்சியவாறு அமர்ந்திருந்தனர்பாடம் எதுவரை நடத்தி உள்ளனர் என்று கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கம் போல மணிகண்டன் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்து என்னப்பா வேண்டும் என்றார் கரகரத்த குரலில். இந்த வகுப்புதான் என்று மெல்லிய குரலில் சொன்னான் மணிகண்டன், அவனை உள்ளே வரச் சொல்லி அவனை மேலும் கீழும் பார்த்தார், அதற்குக் காரணம் அவன் பொத்தான் ஊக்குகளாலும்சட்டை தையல்களும் நிறைந்து காணப்பட்டதுதான். அவர் புதிதாக இந்த ஊருக்கு வந்திருப்பதால் அவருக்குத் தெரியாது, அவன் 2 வருடம் முன்பு வரை நேர்த்தியாக உடை அணிந்தது. அவன் தந்தை கட்டிட தொழிலாளி, அடுக்குமாடி குடியிருப்பு வேலையில் ஈடுபடும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார் . அதிலிருந்தே அவன் குடும்ப நிலை மோசமானது. அவன் அம்மா செல்வி வேலைக்கே போகாதவள், பிள்ளையின் பசிக்காக வேலைக்குச் செல்ல முடிவு செய்து கட்டிட தொழிலாளி வேலைக்குச் செல்வதால் பசியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கைஅதன் காரணமாக மாற்று உடை வாங்க முடியாதலால், பள்ளிச் சீருடைதான் அவனின் மானத்தைக் காப்பாத்திக்கொண்டிருக்கிறது. ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த செல்வம் வாத்தியார் இனிமே, தாமதமா வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். இதுவரை எந்த வாத்தியாரும் மணிகண்டனிடம் இப்படிப் பேசியதில்லை. அதுவே மணிகண்டனுக்கு மனதில் வருத்தத்தைத் தந்தது. அந்தநேரம் சுற்றறிக்கை வந்தது, அது காலாண்டு தேர்வு அட்டவணை. அதை வாங்கிச் செல்வம் வாத்தியார் எழுத மாணவர்கள் எழுதிக்கொண்டனர். அன்று முழுவதும் மணிகண்டன் சுயநிலையில் இல்லை. பிரிட்டோ சிறிது ஆறுதல் கூறினாலும் அவன் மனது ஏற்றுக்கொள்ளாது நேரத்தை கடத்தினான். மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு அதையே நினைத்துக்கொண்டு வந்த பொழுது கதவு திறந்திருந்தது

இவனுக்குக் குழப்பமாக இருந்ததுஎப்போவுமே பக்கத்துக்கு வீட்டில் சாவி வாங்கித்தான் கதவு திறப்பான், அம்மா செல்வியும் இரவு தான் வீட்டுக்கு வருவாளென மெதுவாகச் சென்று கதவை திறக்க, அங்கே அவன் அம்மா செல்வி தலை, கை, கால்களில் கட்டுப்போட்டு அமர்ந்திருந்தாள். அதைப் பார்க்கவும் மணிகண்டன் அலறி என்னமா ஆச்சு என்று கண்களில் நீர் வழிய கேட்டான். அதற்குச் செல்வியோ ஒன்னும் இல்லடா சின்ன அடிதான் மாடிக்கு செங்கல் கொண்டுபோகும்போது கால் தவறிக் கீழவிழுந்திட்டேன் என்றாள். மணிகண்டன் அதற்கு ஏன்மா மெதுவா போக வேண்டியதுதானே என்று கண்ணீருடன் சொல்லிக்கொண்டிருந்தான்ஏற்கனேவே, தன் தந்தை கந்தனும் வேலையின் போது தவறி விழுந்து இறந்தது அவனுக்கு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சரி அழுக்காத ஏதாச்சும் சாப்பாடு செய்றேன்னு எந்திரிக்கப் போனவளை தடுத்து நீ ஒன்னும் செய்ய வேணாம், என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்றேன் என்றான். தோசைக்கு மாவு வாங்கி ஊத்தணும். அவ்வளவுதானே நான் வாங்கிவந்து தோசை சுடரேனு கிளம்பி சென்றுவிட்டான். செல்விக்கு வலி இருந்தாலும் தன் மகனின் செயலால் புன்னகைக்கத் தொடங்கினாள். மணிகண்டன் தோசை ஊற்றி இருவரும் சாப்பிட்டு உறங்கினர்

காலையில் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த மணிகண்டன் அம்மா நீ சமைக்காத நான் சத்துணவு வாங்கி வரேன் என்று வீட்டில் 2 தட்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான். உணவு இடைவேளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். மணி அடித்ததும் முதல் ஆளாக வாங்கிச் சாப்பிட்டு மீண்டும் ஒரு தடவை உணவை வாங்கி இன்னொரு தட்டால் மூடி வீட்டுக்கு நடக்கத் தொடங்கினான். அம்மாவிடம் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு , வேக வேக ஓடிவந்தும் பள்ளி வகுப்புகள் தொடங்கிவிட்டிருந்தன. ரவி வாத்தியார் வகுப்பில் இருந்ததால் சிறிது புன்னகையுடன் வாசலில் நின்றான். அவர் உட்கார சொல்லிவிட்டார். 2 நாட்கள் இவ்வாறே கழிந்தது. அடுத்த நாள் முதல் வகுப்புச் செல்வம் வாத்தியார் அமர்ந்திருந்தார் , அவனை வாசலில் பார்த்ததும் ஏற்கனவே உன்னை எச்சரித்தும் தாமதமா வரியா என்று கத்த தொடங்கினர். அமைதியாக நின்ற மணிகண்டனை இதுதான் கடைசி இனிமே தாமதமா வந்தா வீட்டுக்குத்தான் என்றார்ஆனால், இந்த முறை மணிகண்டன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது , பிரிட்டோ என்னடா அவரு திட்டினாருனு சோகமா இருந்த இன்னைக்குச் சிரிக்கிற, மணிகண்டன் சொன்னான் நாளையில் இருந்து காலாண்டு தேர்வு மதியம்தான் வரணும் அதான் என்றான் இருவரும் சிரித்துக்கொண்டனர்

மறுநாள் தேர்வு என்பதால் காலையிலேயே பள்ளிக்கு வந்து 12 மணிக்குச் சத்துணவு சாப்பிட்டு அம்மாவுக்குக் கொடுத்துவிட்டு 1 மணிக்கு தேர்வுக்கு வந்து விடுவான். இவ்வாறே அந்த வாரம் முழுவதும் கழிந்தது. தேர்வு முடிந்ததால் 10 நாட்கள் விடுமுறை என்று தலைமையாசிரியர் சொன்னார். மாணவர்கள் துள்ளி குதித்துச் சென்றனர். எப்போவும் மணிகண்டனும் அவ்வாறுதான் , ஆனால் அவன் நிலை இப்போது மாறியிருக்கிறது. சத்துணவால் மதியம் மட்டுமாவது சாப்பிட முடிந்தது, தற்பொழுது அந்த 10 நாட்கள் எவ்வாறு சாப்பிடுவது யோசிக்கத் தொடங்கினான். மணிகண்டன் முகத்தைப் பார்த்ததும் செல்வி என்னடா முகம் ஒரு மாதிரியா இருக்கு என்றவுடன் , ஒன்னும் இல்லை தேர்வு முடிந்ததால் 10 நாட்கள் விடுமுறை விட்டுட்டாங்க என்றான். சரி இனி 10 நாளுக்கு ஊரு சுத்த போய்டுவ என்று கிண்டல் செய்தாள். இவனும் பேசாமல் இரவு உறங்கி போனான். முதல் நாள் தண்ணீரை குடித்தே கடத்தினர். இரண்டாம் , மூன்றாம் நாள் பசி கொடுமை சூழ்ந்தது. குழந்தை தொழிளார்கள் தானாக உருவாவதில்லை பசி என்னும் இரக்கமற்றவனால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அதில், மணிகண்டனும் மாட்டிக்கொண்டான். செல்வி எவ்வளவு தடுத்தும் கேட்காமல் வேலைக்குச் சென்றுவிட்டான். இரவு கடையில் இருந்து சாப்பாடு வாங்கிக்கொண்டு அம்மாவுக்குக் கொடுத்தான். ஒரு புறம் கவலை, மறு புறம் தன்னை மகன் பார்த்துக்கொள்வதை எண்ணி மகிழ்ந்தாள். இவ்வாறு போய்க் கொண்டிருக்கையில் 10 நாட்கள் விடுமுறை முடிந்தது. மணிகண்டனும் குளித்து வேகமா கிளம்பினான் செல்வி பள்ளிக்கூடத்துக்குப் போறியா ராசா என்றாள் , இல்லம்மா வேலைக்கு என்று அவளின் பதில் கேட்காமல் சென்று விட்டான். 10 நாட்கள் விடுமுறை அனைத்து ஆசிரியர்களும் தேர்வு தாளை திருத்தி வழங்கும் பணியில் அன்றைய தினம் முடிந்துவிட்டதுஅதில் அறிவியல் பாடத்தில் தாள்களை வழங்கும் போது அவருக்குச் சற்று வியப்பு அதற்குக் காரணம் மணிகண்டன் வாங்கிய 95 மதிப்பெண். மறுநாள் வகுப்பாசிரியர் மதிப்பெண் பட்டியலை தந்துவிட்டுப் போனார். வழக்கம் போல மதிய இடைவேளை முடிந்து முதல் வகுப்புச் செல்வம் வாத்தியார் வகுப்பு, அவரும் யாரு காலாண்டில் முதல் இடம் என்றார். வகுப்பு அமைதியாக இருந்தது, வகுப்பு தலைவன் ராஜா எழுந்து மணிகண்டன் என்றான். அதற்குச் செல்வம் வாத்தியார் அவன் எங்கே என்றார், அவங்க அம்மாவுக்கு அடிபட்டதால் அவன் வேலைக்குப் போறான், இனிமே வரமாட்டேன்னு சொல்லிட்டான் என்று கூறி அமர்ந்தான். செல்வம் வாத்தியார் மணிகண்டன் இருக்கையை நோக்கினார், அவ்விடம் மட்டுமல்ல அவருடைய மனதிலும் வெற்றிடம் தோன்றி இருந்தது.

முற்றும்.