கடல்

காலையிலும் மாலையிலும் 
கதிரவனைக் காட்சிப்படுத்துகிறது 
நீலவானம் போல 
நிலப்பரப்பில் படர்கிறது 
எல்லைகளைத் துறந்த 
ஏகாதிபத்தியமாய்த் திகழ்கிறது 
எண்ணற்ற உயிர்களுக்கு 
எண்ணிலடங்காப் பயனளிக்கிறது 
மழையினை உருவாக்க 
மையம் கொள்கிறது 
புயலாய் மாறியே 
புரட்டியும் போடுகிறது 
மூச்சையடக்கி முயல்வோர்க்கு 
முத்தைப் பரிசளிக்கிறது 
மூச்சை இழப்போர்க்கு 
முக்தியும் கொடுக்கிறது 
முதலிலே அலைகளை 
முன்னால் நிறுத்துகிறது 
முயல்பவரை அதுபோல் 
முயற்சிக்கச் சொல்கிறது 
அமைதிக்கு இலக்கணமாய் 
ஆழ்கடல் இருக்கிறது 
பொருள்கோளால் கவர்ந்து 
பொறுமையும் இழக்கிறது 
நன்மையையும் தீமையையும் 
நடுநிலையாகச் செய்கிறது 
நடுநிலை மனிதரென 
நாவால் உரைக்காது 
கால்தடம் பற்றியே 
கடற்மணல் சுமக்கிறது 
கட்டும் கோட்டைக்கு 
கருப்பொருளாய் மாறுகிறது 

Comments