என்னங்க நேரமாச்சு, நானே கிளம்பிட்டேன் இன்னும் என்ன செய்திட்டு இருக்கீங்க? என்று குழலி சொல்லிக்கொண்டிருக்க, இரும்மா! நம்ம பையன் விருது வாங்கிட்டு வாரான், அவன சுத்தி எல்லா மீடியாவும் இருப்பாங்க, பாக்க நல்லா இருக்க வேணாமா? என்று வளவன் சொல்லிக்கொண்டே அறையிலிருந்து வெளியே வர, போதும்ங்க, அங்க என்ன பொண்ணா பாக்க போறோம்? என்று கேலி செய்து இருவரும் சிரித்து கொண்டிருந்தனர். அட கிளம்பும்மா, இப்படி விளையாடிக்கிட்டே இருந்தா, ஏர்போர்ட்ல பையன் வந்து இறங்கிடுவான் என்று இருவரும் காரில் ஏறிக் கொண்டு விரைந்தனர்.
வளவன் காரை ஓட்ட குழலி “ இளம் விஞ்ஞானியே வருக ” “ தமிழகம் கண்ட முத்தே வருக” என சாலையின் இருபுறமும் பிளக்ஸ் விதவிதமாக வசனங்களுடன் இடம்பெற்றிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தவள். தீடிரென, என்னங்க! என்றதும் வளவன் பதறி, என்னம்மா என்னாச்சு என்றிட, உயர்நீதிமன்றம் பிளக்ஸ் வைக்கக் கூடாதுனு சொல்லிருக்கே, அப்புறமும் ஏன் வச்சுருக்காங்க? என்றதும், வளவன் சிரித்துக்கொண்டே ஏம்மா, மத்தவங்க மாதிரி பிறந்த நாளு கொண்டாட்டம் இல்ல திருமணத்துக்கா வச்சிருக்காங்க, கழிவுநீர்த் தொட்டி தூய்மை செய்ய புதுமையான ரோபோ கண்டுபிடிப்பு செய்திருக்கனால நீதிமன்றமே வைக்க அனுமதி கொடுத்திருக்குமானு சொன்னதும், ஓ சரிங்க என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள் குழலி.
கூட்டம் அலைமோதிய ஏர்போட் வாயிலுக்குள் மெல்ல கார் ஊர்ந்தது. குழலியும், வளவனும் காரை நிப்பாட்டிவிட்டு மகன் நகுலின் வரவுக்கு நாற்காலியில் காத்திருந்தனர். இந்த கூட்டத்த எல்லாம் பாக்கும்போது மனசு ரொம்ப நெகிழ்வா இருக்குதுங்க என்று சொல்லிக் கொண்டே குழலி தன் பேச்சைத் தொடங்கினாள். என்னங்க, உங்களுக்கு நினைவு இருக்கா? நம்ம நகுல் 10 வகுப்பு தேர்வுல 499 மதிப்பெண் எடுத்தப்ப நீங்களும் நானும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கான், பயலாஜி குரூப்ல சேர்த்து டாக்டராக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தப்ப, நகுல் வந்து நான் மெக்கானிக்கல் இன்ஜினியராக படிக்கனும்னு சொன்னான். நாம இரண்டும் பேரும் ஒத்துக்கல. அவன் மனச மாத்த நீங்க, நான், நம்மோட சொந்தகாரங்க எல்லோரும் பேசிபார்த்தும் விடாபுடியா மறுத்திட்டான். அப்புறம் 2 இரண்டு நாளா பேசாம, சாப்டாமா இருந்து அடம்பிடிச்சானு வேண்டா வெறுப்பாதான், நாம அன்னைக்கு இன்ஜினியரிங் படிக்க ஒத்துக்கிட்டோம். ஆனா, இப்போ நினைச்சுப் பார்த்தா, நாம ஏன் அன்னைக்கு அப்படி முட்டாள்தனமா நடந்துக்கிட்டோம்னு எனக்கு தோணுதுங்க. பிள்ளை தன் ஆசைப்பட்ட படிப்ப படிக்க முடியாதோனு அன்னைக்கு எப்படி துடிச்சு போயிருப்பான்ல என்று குழலி கண்களில் நீர்த்துளி கசந்தது. அதைப் பார்த்த வளவன், விடு குழலி பழசையே பேசிகிட்டு. இல்லங்க, நம்மலோட ஆசைக்காக அன்னைக்கு அவன் சரினு சொல்லிருந்தா! இன்னைக்கு இந்த விருது, புகழ் எல்லாம் கிடைச்சிருக்காதில்ல. நீ சொல்றதும் சரிதான் குழலி, எல்லா பெத்தவங்களும் தன்னோட ஆசைய பிள்ளைகள் மேல திணிக்கிறோமே தவிர அவுங்க விருப்பத்த கேட்கவே மறந்திடுறோம், மறுத்திடுறோம் என்று கண்கலங்கிய தருணம், தானியங்கி குரல் ஒலிக்க இருவரும் கண்துடைத்துவிட்டு நகுலை வரவேற்க, திரளான மக்களோடு சேர்ந்து உற்சாகமாயினர்.
நகுலின் தலை தென்பட்டதும் இளம் விஞ்ஞானியே வாழ்கவென முழக்கமிட்டனர். பத்திரிக்கை தொலைக்காட்சி நிரூபர்களும் சுற்றி வளைத்திருந்தனர்.
நீ – இந்த ரோபோ கண்டுபிடிக்க உங்கள தூண்டுனது யாரு?
ந – இந்த சமூகந்தான்
நீ – சமூகமா?
ந – ஆமா, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, 2017 முதல் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கும் தொழிலாளி ஒருவர் சராசரியாக உயிரிழக்கிறார்னு சொல்லுது. இந்த அவலம் தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. துப்புரவுத் தொழிலாளி ஒருவர் இறந்தா அன்னைக்கு மட்டும் உங்க பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகள்ல போடுவீங்க. அதுக்கப்பறம் நடிகர், நடிகை யாரா கல்யாணம் செய்தாங்க, எந்த கட்சியிலிருந்து எந்த கட்சி மாறியிருக்காரு, மதுக்கடை இலக்கு, சாமியார்களின் நதிநீர் இணைப்பு போன்ற நாட்டுக்கு பயனுள்ள செய்திகளதானே போடுவீங்கனதும், அந்த நிரூபர் மட்டுமில்லாது பாதிபேரு களைந்து சென்றுவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே நின்று பேட்டி எடுத்தனர்.
நீ - இந்த கருவியோட செயல்பாடு பத்தி கொஞ்சம் சொல்லுங்க?
ந - இது, தானியங்கி ரோபா 2 அடி உயரந்தான் இருக்கும், வாட்டர் புரூப் வசதி இருக்கதால கழிவுநீர் தொட்டிக்குள்ள அனுப்பலாம். நாம அனுப்பும்போது இதில் பொருத்தியுள்ள கேமரா மூலமா நாம மேலிருந்து தெளிவா பார்க்கமுடியும். பிளாஸ்டிக் பேப்பர் குப்பபைகள் ஏதாவது அடைச்சிருந்தா நாம மேலிருந்து கொடுக்கிற தகவல்வச்சு ரோபாவே சரி செய்திடும். இந்த ரோபாவால் 10 கிலோ எடையுள்ள பொருட்களை நகர்த்தும் அளவுக்கு திறன் கொடுத்திருக்கேன்.
நீ – நீங்க காப்புரிமையைக் கூட அரசுக்கே கொடுத்திட்டீங்களாமே?
ந – ஆமா, ஒரு தனிமனிதன் பேருல இருந்தா வணிக நோக்கமாதான் இருக்கும். அரசு பேருல இருந்தாதான் பொதுமக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.
நீ - இன்னும் ஒரு கேள்வி
ந - இல்லங்க போதும்
என்று அம்மாவையும் அப்பாவையும் பார்ப்பதற்கு நடக்க தொடங்கியதும் கூட்டம் களைந்து போனது.
நகுலைப் பார்த்ததும், குழலி கண்களில் நீர்கசிய இறுகி அணைத்துக் கொண்டாள். வளவனும் நெகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தார். சரி, வாங்க வீட்டுக் போலாம் என்று இறுக்க சூழ்நிலையை உடைத்து கைப்பிடித்து அழைத்துசென்றார் வளவன். வளவன் காரைச் செலுத்த குழலியும், நகுலும் பின் சீட்டில் உட்கார்ந்து பேசி கொண்டே வந்தனர். டேய் அந்த் பிளக்ஸ்ல பாரேன் என்று காட்டி சிரித்துக் கொண்டே வந்த குழலி திரும்பி பார்க்க நகுலன் கண்மூடி அமர்ந்திருந்தான்.
அம்மா! என்று குரல் ஒலிக்க, “இதோ வரேன்” என்று குழலி வீட்டுக்குள்ளிலிருந்து வெளியே வந்தாள். வாங்க ஐயா, நேத்திலிருந்து கழிவுநீர் தொட்டிலிருந்து, கழிவு தண்ணீயெல்லாம் வெளியே வந்திட்டே இருக்குது. அதை, சரி செய்யதான் உங்கள வரச்சொல்லிருந்தேன்.
சரிம்மா, நான் பாத்துகிறேன் என்று முனுசாமி வீட்டில் கொல்லை புறத்தில் கழிவுநீர் தொட்டி அருகில் சென்றபோதே, தண்ணீர் கால்கூட வைக்கமுடியாத அளவு தேங்கி கிடந்தது. தன் சட்டைய கலட்டிக் கொண்டிருக்கும் போதே, “ மாமா ” என்று அழகிய குழந்தை ஒன்று நின்று கொண்டிருந்தது. என்னப்பா என்ற முனுசாமியிடம், மாமா இங்க ஏன் வந்தீங்க? மூக்கை மூடிக்கொண்டு இது ஆய் தண்ணி, இங்க வரக்கூடாதுனு அம்மா என்ன நேத்தே திட்டுனாங்க. நீங்க, ஏன் சட்டை கலட்டி நிக்குறீங்க.
செல்லம், இதுல ஏதோ அடைச்சிருக்கனாலதான் தண்ணீர் வெளியே வருது. அதை சரி செய்தாதான் தண்ணீ வெளியே வராம இருக்கும்.
ஓ அப்படியா,
ஆமாம்பா.
சரி, அதை நீங்க எப்படி சரி செய்வீங்க.
நான் அந்த தொட்டிக்குள்ள இறங்கி அப்புறம் ஏதாவது காகிதம் அடைச்சிருக்கானு பார்ப்பேன் என்றதும்,
அய்யோ அந்த தொட்டிக்குள்ளவா?
ஆமாம்பா,
ஏன் மாமா, என்ன இந்தப் பக்கம் வந்ததுக்கே அம்மா திட்டுனாங்க, நீங்க அந்த தொட்டிக்குள்ள இறங்குனா, உங்க அம்மா திட்ட மாட்டாங்களா? மாமா, நான் வேணா வீட்டுல தூசிலாம் போக்க வாக்யூம் மெசின் வச்சிருக்காங்க அத எடுத்துவரவா?
ஹா ஹா, இல்லப்பா, அதுல எல்லாம் இத சரி செய்ய முடியாதுப்பா.
இதுக்கு மிஷன் ஏதுமில்லப்பா. அப்புறம் இந்த வேலைதான் சின்ன வயசிலருந்து செய்திட்டு இருக்கேன். இந்த வேலைதான் எங்க வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சோறு போடுது. இதுல இறங்கி வேலை செய்யாட்டி சாப்பாட்டுக்கு என்ன பண்றது.
ஓ, ஆமா, இதுக்கு ஏன் இன்னும் மிஷின் கண்டுபிடிக்கலையா?
இல்லப்பா..
ஏன்?
தெரியலப்பா..
சரி மாமா, பெரியவன் ஆனதும் இதுக்கு ஒரு மிஷின் கண்டுபிடிக்கிறேன்.
சரிப்பா, நீ போ அம்மா திட்டுவாங்கள்ல.
இல்லை, மாமா நான் இங்கேயே இருக்குறேனே!
வேண்டாம்பா, நீ சொன்னதே போதும்..
போதும் போதும் என்ற குரல் கேட்டு கொண்டேயிருந்தது விழித்துப் பார்க்கையில் தன்னெதிரே முனுசாமி மாமாவாக தெரிந்த தன் அம்மாவை பார்த்துக் கொண்டேயிருக்க, வீடு வந்திருச்சுப்பா இறங்குனதும், நிறைவான புன்னகை உதிர்த்தான் நகுல்.
முற்றும்.
Comments
Post a Comment